திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.46 திருக்கருகாவூர்
பண் - கௌசிகம்
முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே
மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்
கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்
அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
1
விமுத வல்லசடை யான்வினை யுள்குவார்க்
கமுத நீழலக லாததோர் செல்வமாங்
கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர்
அமுதர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
2
பழக வல்லசிறுத் தொண்டர்பா வின்னிசைக்
குழக ரென்றுகழை யாவழை யாவருங்
கழல்கொள் பாடலுடை யார்கரு காவூரெம்
அழகர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
3
பொடிமெய் பூசிமலர் கொய்துபு ணர்ந்துடன்
செடிய ரல்லாவுள்ளம் நல்கிய செல்வத்தர்
கடிகொள் முல்லைகம ழுங்கரு காவூரெம்
அடிகள் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
4
மைய லின்றிமலர் கொய்து வணங்கிடச்
செய்ய வுள்ளம்மிக நல்கிய செல்வத்தர்
கைதன் முல்லைகம ழுங்கரு காவூரெம்
ஐயர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
5
மாசில் தொண்டர்மலர் கொண்டு வணங்கிட
ஆசை யாரஅருள் நல்கிய செல்வத்தர்
காய்சி னத்தவிடை யார்கரு காவூரெம்
ஈசர் வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.
6
வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன்
கந்த மௌவல்கம ழுங்கரு காவூரெம்
எந்தை வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.
7
இப்பதிகத்தில் எட்டாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
8
பண்ணின் நேர்மொழி யாளையோர் பாகனார்
மண்ணு கோலம்முடை யம்மல ரானொடுங்
கண்ணன் நேடஅரி யார்கரு காவூரெம்
அண்ணல் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
9
போர்த்த் மெய்யினர் போதுழல் வார்கள்சொல்
தீர்த்த மென்றுதெளி வீர்தெளி யேன்மின்
கார்த்தண் முல்லைகம ழுங்கரு காவூரெம்
ஆத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
10
கலவ மஞ்ஞை யுலவுங் கருகாவூர்
நிலவு பாடலுடை யான்றன நீள்கழல்
குலவு ஞானசம் பந்தன செந்தமிழ்
சொலவ லாரவர் தொல்வினை தீருமே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com